அண்ணன் என்று பழகினேன்…அவனை சும்மா விடாதீர்கள்: அன்று நடந்தது என்ன? பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர்

9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, மீரா சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் அண்ணன் ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார். இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக பழகியுள்ளார். இந்நிலையில், தீபாவளி முடிந்து அடுத்தநாள் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் சின்னப்பா. இளம்பெண்ணும் அந்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

வீட்டுக்கு வந்த அந்த இளம்பெண் சின்னப்பா கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் மயங்கியதாகக் கூறப்படுகிறது. சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண்ணுக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்தபோது அதிக அளவில் உதிரப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ததில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னப்பாவுடன் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்யக்கோரி, பெண்ணின் உறவினர்கள், மாதர் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அன்று நடந்தது குறித்து புவனா பொலிசில் தெரிவித்தாவது, எனக்கு எங்க அம்மாதான் உலகம். அவர் கஷ்டப்படக் கூடாதுன்னுதான் வேலைக்குப் போனேன். என் அப்பா ஒன்பது மாசத்துக்கு முன்னாடி செத்துப் போயிட்டார். இதனால் குடும்பமே வேறு வழியில்லாமல் தவித்தது. நான் யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டேன். என்னோடு கடையில வேலை பார்த்த சின்னப்பாவை, வார்த்தைக்கு வார்த்தை `அண்ணே’ என்றுதான் கூப்பிடுவேன்.

அவர் வீட்டில் விருந்து நடப்பதாகக் கூறித்தான் அழைத்தார். நான் வர முடியாதுன்னு சொன்னேன். அதற்கு அவர், நீ வரலைன்னா எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும். இது முக்கியமான விருந்து நிச்சயம் வரணும்னு சொன்னார்.

அதை நம்பித்தான் நானும் போனேன்.அங்கு யாருமே இல்லையேன்னு கேட்டேன். எல்லோரும் கோயிலுக்குப் போயிருக்காங்க, வந்துருவாங்க சொன்னார்.நான் உள்ளே போனதும் ஆப்பிள் பழம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அப்புறம் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்தார். ஆள் இல்லாத வீடுங்கறதால குடிக்கத் தயங்கினேன்.

வற்புறுத்திக் குடிக்க வைத்தார். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. கொஞ்சம் நேரம் கழித்து என் உடம்பில் கடுமையான வலி ஏற்பட்டது. என்னமோ நடக்குதுங்கறத மட்டும் உணர முடிஞ்சது. ஆனால் கண் முழிக்க முடியவில்லை. அப்ப எங்க கடை முதலாளி கார்த்தியும் சின்னப்பாவும் பேசிக்கிட்டு இருந்தது கேட்டது. என்னை ஏமாத்திக் கூட்டி வந்த இப்படிச் செஞ்சுட்டாங்க சார் என கதறியுள்ளார் புவனா.