தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார். அகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. சந்தோஷ் தனது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை, அகிலா எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களுக்கு தொடர்புகொண்டு, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை செய்து இருப்பார் என பொலிஸ் புகார் அளித்தனர்.
இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும்,
அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் சந்தோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்