தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (55). இவருக்கு கல்யாணி (40) என்ற மனைவியும், ஆர்த்தி (16) என்ற மகளும் உள்ளனர். நேற்றிரவு 10 மணிக்கு மேல் முத்து, கல்யாணி, ஆர்த்தி ஆகிய 3 பேரும் இரவு தூங்குவதற்கு தயாரானார்கள். அப்போது வீட்டுக்கதவை சிலர் தட்டினர். உடனே முத்துவின் மனைவி கல்யாணி வீட்டுக்கதவை திறந்தார். கதவு முழுமையாக திறக்கப்படவில்லை. அதற்குள் 4 பேர் கும்பல் திபு, திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது.
கதவை திறந்த கல்யாணியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து இறந்தார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு முத்துவும், அவருடைய மகள் ஆர்த்தியும் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்களையும் சுற்றி வளைத்து வெட்டியது. அவர்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களது அபயகுரல் அந்த பகுதி முழுவதும் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்னவோ, ஏதோ என்று ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் படுகாயமடைந்த முத்து, ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கல்யாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கும்பல் வெறியாட்டத்தால் கொலை நடந்த வீடு முழுவதும் ரத்தம் ஆங்காங்கே சிதறி கிடந்தது போர்க்களம் போல் காட்சி அளித்தது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
கல்யாணி மட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முத்து குடும்பத்துக்கும், இன்னும் சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதனால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.