இறந்த எஜமானரின் உடலை விட்டு எழுந்து செல்ல மறுத்த வளர்ப்பு நாய்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த எஜமானரின் உடல் அருகே படுத்துக்கொண்டு அவருடைய செல்லப்பிராணி எழுந்து செல்ல மறுத்துள்ள சோக சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் Montemorelos பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் விக்டர் ரைனா வாஸ்க்வெஸ் என்கிற 57 வயது நபர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக வந்த ரயில் விக்டர் மீது மோதியிருக்கிறது. அதிகாலை நடத்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விக்டர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விக்டரின் உடலை கைப்பற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் அவருடைய உடல் அருகே படுத்துக்கிடந்த அவருடைய வளர்ப்பு நாய், ஆம்புலன்ஸ் ஊழியரின் கையை கடித்துள்ளது. அதன்பிறகு அந்த நாய் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, விக்டரின் உடல் எடுத்து செல்லப்பட்டது. இந்த புகைப்படமானது தற்போது இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.