சீனாவில் கிழக்கு ஜெஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இளைஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இவர் சூடான குழம்பில் சமைக்கப்பட்டிருந்த பன்றி மற்றும் ஆட்டிறைச்சியை உட்கொண்டுள்ளார். அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு அதிக தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வலிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகளும் இருந்தன.
அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக இளைஞர் சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது. இளைஞரின் மண்டையோட்டில் “இன்டர்கிரானியல் கால்சிஃபிகேஷன்ஸ்” மற்றும் புண்கள் தெரிந்த்துள்ளன. ஆனால் அவர் அதற்கு மேல் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக ஜெஜியாங் மருத்துவ பல்கலைகழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், அவருடைய மூளையில் நூற்றுக்கணக்கான நாடாப்புழுக்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு நாடாப்புழுக்களை அகற்றிய பிறகே இளைஞர் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளார். இந்த செய்தியானது சீனா நாட்டு ஊடகங்களில் வைரலாகி வருகிறது.