உங்களுக்கு மயக்கம் வந்தால் நாங்க பொறுப்பல்ல.

உலகில் உள்ள அரச குடும்பங்களுள் மிகவும் செல்வச் செழிப்பு மிக்க குடும்பங்களை வரிசைப்படுத்தினால், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் போன்றோர் எல்லாம் அவர்களுக்குப் பின்னால் நிற்கவேண்டும். பல ஆயிரம் கோடி டாலர்களை இந்த அரச குடும்பத்தினர் சொத்துக்களாகச் சேர்த்து வைத்துள்ளனர். உங்களின் ஏக்கப் பெருமூச்சில் கோடை வெயிலின் சூடு சற்று அதிகமானாலும் பரவாயில்லை, வாங்க. பெரும் பணக்கார அரச குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.டாப் 10 பணக்கார அரச குடும்பங்களை இறங்கு வரிசையில் அறிமுகப்படுத்துவதில் சற்றுப் பொறாமையுடன் நாங்களும் பெருமையடைகிறோம்.

10. பஹ்ரைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 4 பில்லியன் டாலர்) பஹ்ரைன் அரச குடும்பத்தினர், செல்வ மதிப்பீட்டின் அடிப்படையில் பத்தாவது இடத்தில் இருக்கின்றனர். 1766 ஆம் ஆண்டு முதல் பஹ்ரனை ஆளும் அரசு குடும்பத்தினராக கலீஃபா குடும்பத்தினர் உள்ளனர். தற்போதைய அரசராக உள்ள ஹமாத் பின் இஷா அல் கலீஃபா, இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நெருங்கிய நண்பர். 2002 ஆம் ஆண்டு இவர் தன்னை பஹ்ரைனின் அரசராக அறிவித்துக் கொண்டார்.

 


9. லீச்டென்ஸ்டைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 12 பில்லியன் டாலர்) நமது பட்டியலில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ள லீச்டென்ஸ்டைன் அரச குடும்பத்தினர் ஆஸ்திரியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், தற்போது லீச்டென்ஸ்டைன் என்னும் சிறிய சுயாட்சிப் பகுதியை ஆண்டு வரும் லீச்டென்ஸ்டைன் அரச குடும்பம்தான் செல்வவளம் மிக்க முதல் பத்து குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரே அரச குடும்பம் ஆகும். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர்கள். சொத்தின் பெரும்பகுதி தற்போது ஆட்சியில் இருக்கும் இரண்டாம் பிரின்ஸ் ஹான்ஸ் ஆடம் அவர்களுக்குச் சொந்தமானதாகும்.

8. துபாய் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 19 பில்லியன் டாலர்கள்) மக்தூம் குடும்பத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் துபாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1833 ஆம் ஆண்டு முதல் துபாயின் அரச குடும்பமாகத் திகழும் மக்தூம் குடும்பத்தில் 12 அடிப்படை உறுப்பினர்களும் அவர்களைச் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அரச குடும்ப அங்கத்தினர்களாக உள்ளனர். இக்குடும்பத்தினர் 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளனர்.

7. மொராக்கோ அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 20 பில்லியன் டாலர்) மொராக்கோ நாட்டை ஆட்சி செய்பவர்கள் அல்வைத் வம்சத்தினர். 13ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த இப்பரம்பரையினர் 1631 ஆம் ஆண்டில் தங்களுடைய அரச பரம்பரையை நிறுவினர். 1999 ஆம் ஆண்டு அரச பொறுப்புக்கு வந்த அரசர் ஆறாவது முகமது தலைமையிலான அரச குடும்பத்தில் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.

6. புரூனே அரச வம்சத்தினர் (சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர்கள்) தென் கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான புரூனே கி்.பி.1363 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மன்னராட்சிக்கு உட்பட்ட நாடாகத் திகழ்கிறது. தற்போதைய அரசராக இருக்கும் சுல்தான் ஹசனல் பொகியா கடந்த 51 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

5. தாய்லாந்து அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 60 பில்லியன் டாலர்கள்) நமது பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளவர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினர். சாக்ரி (The Chakri) வமிசத்தைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து நாட்டை கடந்த 236 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் மிகவும் மதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். தாய்லாந்து நாட்டின் தற்போதைய அரசராக இருப்பவர் மஹா வஜ்ரலங்கார்ன் என்பவர்.

4. அபுதாபி அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு – 150 பில்லியன் டாலர்கள்) அபுதாபியை ஆள்பவர்கள் அல் நஹ்யான் (Al Nahyan) என்னும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், துபாய் அரச குடும்பத்தினரான அல் மக்தூம் வம்சத்தினரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இவர்களது குடும்பம் கி்.பி.1793 ஆம் ஆண்டு முதல் அபுதாபியை ஆண்டு வருகிறது. இவர்களுடைய அரச குடும்பத்தில் 200 ஆண்கள் உள்ளனர். பெண் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

3. கத்தார் அரச குடும்பம் (சொத்தின் மதிப்பு – 335 பில்லியன் டாலர்) செல்வச் செழிப்புமிக்க அரச குடும்பத்தினர் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர்கள், கத்தார் அரச குடும்பத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து கத்தாரை ஆண்டு வருபவர்கள் அல் தாணி (Al Thani) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கத்தாரின் தற்போதைய அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தாணி என்பவர். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சிபுரிந்து வருகிறார். தன்னுடைய 37ஆவது வயதில் பொறுப்புக்கு வந்த இவர், உலகிலேயே குறைந்த வயதில் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவராக அறியப்படுகிறார். அரச குடும்பத்தில் ஏறக்குறைய 7000 முதல் 8000 வரையிலான உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2. குவைத் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 360 பில்லியன் டாலர்) குவைத்தின் அரச பதவியில் இருப்பவர்கள், அல் ஷபா (Al – Sabah) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி்.பி.1752 ஆம் ஆண்டு முதல் இக்குடும்பத்தினர் குவைத்தை ஆண்டு வருகின்றனர். தற்போதைய குவைத் அரசர் பெயர், ஆறாவது ஷேக் ஷபா அஹமது அல் ஜபார் அல் ஷபா என்பதாகும். இக்குடும்பத்தில் மொத்தம் 1000 உறுப்பினர்கள் உள்ளனர்.

1. சவூதி அரேபியா அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர்) உலகத்திலேயே அதிக செல்வச் செழிப்பு மிக்க அரச குடும்பமாகத் திகழ்வது சவூதி அரேபிய மன்னர் குடும்பமாகும். இவர்களின் சொத்து மதிப்பைக் கேட்டால் திறந்த வாயை மூட மாட்டீர்கள். ஆம், 1.7 டிரில்லியன் டாலர் அளவுக்கு இக்குடும்பத்தினரிடம் சொத்துக்கள் உள்ளன. ஏறக்குறைய ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடி டாலர்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த 15000 உறுப்பினர்களிடம் இச்சொத்துக்கள் பரவியுள்ளன.