பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்னர் காலமானார். அவரின் சடலம் சென்னை மந்தவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் கல்லறைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் கல்லறையும் ஒன்று. இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் கல்லறையை பார்த்ததும் வியப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார்.
எப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை தான். குமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு…
ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த கற்பனை திறன் வியக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.