பெற்ற தாயே தனது 4½ வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்த சஜிதாவின் மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). சஜிதாவின் கணவர் கடந்த ஒரு வடத்திற்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி இரவு 11 மணியளவில் தனது 2 மகள்களையும் ஒரு அறையில் தூங்க வைத்து விட்டு சஜிதா மற்றொரு அறையில் தூங்கினார். நேற்று முன்தினம் காலை சுபாஷினி எழுந்து பார்த்தபோது தன்னுடன் தூங்கிய தனது சகோதரி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்ரீஹர்ஷினியை தேடிப்பார்த்தனர். ஆனால் அவள் கிடைக்காததால் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று சஜிதா அழுது கொண்டே புகார் அளித்தார். இந்நிலையில், தனது மகளை கொலை செய்தது சஜிதா என்பவது தெரியவந்ததையடுத்து அவர் பொலிசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், எனது கணவர் பிரபாகரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ரூ.2 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் திடீரென்று இறந்து விட்டார்.
எனவே கடனை கட்டுவதற்கும், குடும்பத்தை கவனிக்கவும் வேண்டி நான் அவர் பணி செய்த அதே பங்களாவில் பணிபுரிந்து கொண்டே, வெளியே தோட்ட வேலைக்கும் சென்று வந்தேன். எனது 2–வது மகளுக்கு 4½ வயதே ஆவதால் அவளை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்பது சிரமமாக இருந்தது. எனவே மகளை கொன்று விட முடிவு செய்தேன். எனவே இரவு மது அருந்தி விட்டு எனது மனதை கல்லாக்கிக்கொண்டேன்.
நள்ளிரவு 1.30 மணியளவில் பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றாக தூங்கிக்கொண்டிருந்த எனது மகளை தூக்கி கொண்டு நான் வேலை பார்க்கும் பங்களாவிற்கு சென்றேன். பின்னர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அவளை மூழ்கடித்து கொலை செய்து விட்டு தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து படுத்து விட்டேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.