தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது மைனர் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலிக்கும் பெண் குறைந்த சாதி என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில வாரங்களாக சதீஷ் காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.இதனால் விரக்தியடைந்த சுமதி சதீஷ் தன்னை ஏமாற்றியதாக பெற்றோரிடம் கூறி அழுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சதீஷை, நண்பர் ஒருவர் ஏமாற்றி அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் திரண்டிருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார்.அங்கிருந்தவர்கள் சதீஷை சுற்றிவளைத்து பிடித்து கையில் மஞ்சள் தாலியை கொடுத்து சுமதி கழுத்தி கட்ட சொல்லி மிரட்டினர்.
ஆனால் இதற்கு சதீஷ் திட்டவட்டமாக மறுத்தநிலையில் அனைவரும் தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் காதலி கழுத்தில் தாலி கட்டினார் சதீஷ்.பின்னர் இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த சதீஷின் குடும்பத்தார், 17 வயது சிறுமிக்கு தங்களது மகனை கட்டாயமாக திருமணம் செய்து வைத்த அந்த சிறுமியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சப் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.