என் தோற்றம் தமிழர்களை போல உள்ளதே! தமிழன் என தெரியாமல் வெளிநாட்டில் வாழ்ந்தவருக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி..!!

தமிழகத்தின் தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை சின்னகடை வீதியில் வசித்த கலியமூர்த்தி – தனலட்சுமி தம்பதி, வறுமை காரணமாக, தங்களின், இரண்டு மகன்களை, 41 ஆண்டுகளுக்கு முன், டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுத்துள்ளனர். தத்து கொடுக்கப்பட்டவர்களில் ஒருவரான, 43 வயது மகன் டேவிட் கில்டென்டல் நெல்சன் தன் தாயுடன் 2 வயது குழந்தையாக இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தோடு தாயை கடந்த 2013ல் இருந்து தேட ஆரம்பித்து இருக்கிறார். அதாவது என் தோற்றம் தமிழர்கள் போல இருப்பதை உணர்ந்தேன், இதையடுத்து டென்மார்கில் உள்ள பெற்றோரிடம் விசாரித்த போதே நான் சிறுவயதில் தத்து கொடுக்கப்பட்டது தெரிந்தது என டேவிட் கூறினார்.

ஆனால் தன்னை பெற்ற தாய் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் டென்மார்க்குக்கு திரும்பி சென்றார். ஆனாலும் அவர் தனது பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தீவிரமாக இருந்தார். தமிழகத்தில் எங்காவது ஒரு மூலையில் தனது பெற்றோர் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. நான்காண்டுகள் கழித்து மீண்டும் 2017-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார் டேவிட். இம்முறை அஞ்சலி பவார் மற்றும் அருண் தோஹ்லே ஆகிய சமூக செயற்பாட்டாளரகளை சந்தித்து தனது தேடலை மீண்டும் துவக்கி இருக்கிறார். அப்போது அவர்கள் உருவாக்கிய ஆவணபடம் சமூக வலைதளங்களில் பரவி தன் தாய் தனலட்சுமியை சென்றடைய பெரும் உதவி செய்திருக்கிறது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை தனது தாய் தனலட்சுமி இருக்கும் சென்னை மணலி வீட்டுக்கு சென்ற டேவிட் அவரை சந்தித்தார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு அனைவரையும் கண்கலங்க வைத்தது. இரண்டு வயதில் தான் இழந்த தன்னுடைய இரண்டாவது மகன் டேவிட் 41 வயதில் தன்னை தேடி வந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் தனலட்சுமி. மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, அழுத அவர் மகனிடம் தனது எண்ணங்களை சொல்லிப் பார்த்தார். ஆனால் அது டேவிட்டுக்கு புரியவில்லை காரணம் டேவிட்டுக்கு தமிழ் தெரியாது. தனலட்சுமிக்கு டேவிட் மொழி தெரியாது. ஆனால் இருவருக்கும் ஒன்று தெரியும் அது பாசமொழி அந்த மொழியால் இருவரும் பேசிக் கொண்டனர்.

டேவிட்டின் அண்ணன், தனலட்சுமியின் மூத்த மகன் ராஜாவும் டென்மார்க் நாட்டில் உள்ளார். தற்போது அவர் மார்ட்டின் மேனுயேல் என்ற பெயரில் அங்கு வாழ்ந்து வருகிறார். தனது தாயை 41 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பதற்கு தனக்கு உதவிய சமூக ஆர்வலர் அஞ்சலி பவார் அருண் தோலே மற்றும் தனது நண்பர்கள், இணையதள நண்பர்கள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் டேவிட் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அவர் கூறுகையில், அம்மாவை நேரில் பார்ப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த நம்பிக்கையில் தேடி அலைந்தேன். அம்மா கிடைத்துவிட்டார். அம்மாவை நேரில் சந்தித்த இந்த நாளை மறக்கவே முடியாது. இவ்வளவு உறவுகள் எனக்கு இருக்கிறார்கள் என நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார்.