பொள்ளாச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் லதா, எனது மகன் எந்த தப்பும் செய்யாத நிரபாரதி என தொடர்ந்து பேசி வருகிறார். விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது மகன் எம்பிஏ படித்துள்ளான். படித்து முடித்த பின்னர் அவனுக்கு விபத்து நடந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. பிறகு, தனது தந்தை கொடுத்த பணத்தை வைத்து முதலில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தான். காலையில் ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் போனா, ராத்திரி 10.30 மணிக்குத்தான் திரும்பி வருவான். அவனை நான் தவறாக வளர்க்கவில்லை. எங்களுடைய சொந்தக்கார பெண்ணை விரும்பினான், அந்த பெண்ணும் இவனை உயிருக்கு உயிராக விரும்பியது.
இதற்கிடையில் அந்பெண்ணின் தவறான புகைப்படம் திருவுக்கு கிடைத்ததையடுத்து திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன்பின்னர், நகைக்கடைக்காரர் பொண்ணு எனது மகன் மீது ஆசைப்பட்டார். வீட்லேயே இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தேன். இந்நிலையில், இவனுக்கு உடம்புசரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அந்த பொண்ணு இவனை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டது.
எனது மகனை இரண்டு பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள், ஆனால் எனது மகன் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை. அவன் நோயாளி. எங்களது குடும்ப புகைப்படத்தையும் வெளியிட்டு தவறாக பேசுகிறார்கள். அண்ணன், தங்கச்சின்னு கூட பார்க்காம, இப்படி அபாண்டமா பொய் குற்றம் சொல்கிறார்கள். என் பொண்ணு கல்லூரிக்கு போக மாட்டேன்னு சொல்லி அழுதுட்டே இருக்கா. தற்கொலை பண்ணிக்கறேன்னு சொல்கிறாள்.
அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து பண்ணை வீட்டில் தவறு செய்வது என்று கூறுவதெல்லாம் உண்மையில்லை. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறுவது குறித்து எனக்கு சரியாக தெரியாது என்கிறார் தாய் லதா.