கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன். இவருடைய மனைவி பிரியா. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மகன் பயிலும் பள்ளிக்கு உணவு கொடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பிரியா சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கும்பகோணம் காவல் நிலையத்தில் கணவர் முருகன் புகார் அளித்தார். விசாரணை நடத்திய கும்பகோணம் தெற்கு போலீசார், பிரியாவின் செல்போன் எண் கடைசியாக கோவை துடியலூரில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறிவிட்டு தேடுவதை நிறுத்தியுள்ளனர்.
இதனால் இரு குழந்தைகளுடன் கோவைக்கு வந்த கணவர் முருகன், மனைவியை கண்டு பிடித்து தர நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்து அழைத்து சென்ற பந்தயசாலை போலீசார், விசாரணை நடத்தி புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பிரியாவை அவர்கள் தேடி வருகின்றனர்.