பைகுல்லாவில் உள்ள மோதிபாய் தெருவில் வசிக்கும் ஒருவர் நேற்று (ஏப்ரல் 18) போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், டிசர்ட் அணிந்த ஒரு நபர், சாக்லேட் தருவதாகக் கூறி, தனது உறவினரின் மகள்கள் 2 பேரையும் கடத்திச் சென்றுவிட்டதாகவும், கடத்தப்பட்ட சிறுமிகளுக்கு முறையே 5 மற்றும் 7 வயதாகிறது எனவும் அவர் கூறியிருந்தார். இதன்பேரில், அக்ரிபடா போலீஸ் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கடத்திச் சென்ற நபரின் சிசிடிவி கேமிரா காட்சிகள் போலீசாரிடம் சிக்கியது. அதன் அடிப்படையில், உடனடியாக தேடுதல் பணியை போலீசார் முடுக்கிவிட்டனர். 12 மணிநேரத்திற்குள்ளாக, குறிப்பிட்ட நபர் கும்பார்வாடா பகுதியில் நடமாடுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த நபரை உடனடியாக சுற்றி வளைத்துப் போலீசார் கைது செய்தனர். 2 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை எளிதில் கைது செய்ய முடிந்ததாக, போலீசார் குறிப்பிட்டனர். எந்த தவறும் நடக்கும் முன்பே, சிறுமிகளை மீட்டது நிம்மதியாக உள்ளதென்று, அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.