திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார், பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மஞ்சுளா (வயது 20) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பணியாற்றி வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன் (21) என்பவரை மஞ்சுளா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை அறிந்த அஞ்சுளாவின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சுளா ஆகிய இருவரையும் சொந்த ஊரான வால்பாறைக்கு அனுப்பி வைத்தார்.
சொந்த ஊருக்கே போனாலும் காதலுடன் மஞ்சுளா செல்போனில் பேசிவந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மஞ்சுளா பல்லடம் உப்பிலிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மறுநாள் காதலனை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களது காதலுக்கு கார்த்திகேயன் வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டதால் அவரை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் தன் பெற்றோருக்கு விருப்பமில்லாததால் விரக்தியில் இருந்த மஞ்சுளா எதிர்பாராத விதமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.