திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தினேஷ் (31). இவருக்கும், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை முதலே திருமணத்துக்கு செல்வதற்காக வீட்டில் அனைவரும் கிளம்பி கொண்டு இருந்தனர். மணமகன் தினேஷ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டு இருந்தார். மணமகனை எழுப்புவதற்காக அவரது தாய் மாடிக்கு சென்று அறையின் கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தினேஷ் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இது பற்றி அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மணமக்களை வாழ்த்துவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், தினேஷ் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் தன்னைவிட அதிகம் படித்து இருந்ததால் தினேஷ் திருமணத்துக்கு ஒருவித தயக்கத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு நீண்டநேரம் தினேஷ் தனது தாயிடம் பேசி உள்ளார். அதன்பிறகு நள்ளிரவுக்கு மேல் தூங்க சென்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாழ்வுமனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.