குருபெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் கடைசி ராசி நீங்கள்தான்

அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள்.‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே!

பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள்.தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.

 

குருபகவானின் பார்வை பலன்கள்
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும்.

அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும்.

வீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும்.

மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.

தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, என்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.

சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடியாக மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார்.

கன்னிப் பெண்களே!
உங்களுக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகு கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

மாணவ, மாணவிகளே!
நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்.

கலைத்துறையினரே!
திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே! இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும். புகழ் பெற்ற பழைய கலைஞர்களால் சில உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே!
தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.

விவசாயிகளே!
மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.