மும்பையில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் பேஷன் டிசைனர் சுனிதா சிங் (45). இவர் மகன் லக்சயா சிங் மற்றும் அவரது காதலி ஆஸ்பிரியா பானர்ஜி வசித்து வந்தனர். லக்சயா மாடலிங் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை சுனிதா சிங் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மகன் லக்சயா, அவர் குளியல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அவர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் மது போதைக்கு அடிமையான இவருக்கும் தாய்க்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ஏற்பட்ட கைகலப்பில் தாய் சுனிதாவை, நடிகர் லக்சயா சிங் குளியலறையில் தள்ளியதாக கூறப்படுகிறது.
வாஸ்பேஷினில் தலை மோதி, ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனிதாவை கவனிக்காத அவரது மகன், கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.காலையில் குளியலறை கதவை திறந்தபோது, தாய் சுனிதா சடலமாக கிடந்ததை கண்ட லக்சயா சிங், பொலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொலிசார் அங்கு வந்த நிலையில் யாரோ மந்திரம் செய்து தாயை கொன்றுவிட்டதாக லக்சயா கூறியுள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லக்சயா தான் அவரது தாய் சுனிதாவை கொன்றது உறுதியானது.இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.