குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல்: வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்

பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில், 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் எனது மனைவி அபிராமிக்கு போன் செய்தேன். அபிராமிக்கு போன் போகவில்லை.உடனே மாமனார் வீட்டுக்குப் போனேன். அங்கு எனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாததால் சந்தேகமடைந்தேன். ஏற்கெனவே ஒரு முறை எனது மனைவி கோபித்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சுந்தரம் என்பவர் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியிருந்தார்.

அவரை நாங்கள் சுந்தரம் வீட்டிலிருந்து அழைத்தபோது வீட்டுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள்.நானும் எனது மச்சான் பிரசன்ன மணிகண்டன், மாமா சௌந்தர்ராஜன், உறவினர்களும் சமாதானம் பேசி அழைத்து வந்தோம்.எனவே அங்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்து எனது மச்சான் பிரசன்ன மணிகண்டனுடன் சுந்தரம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுந்தரமும் இல்லை. எனது மனைவியும் இல்லை. உடனே நானும் பிரசன்ன மணிகண்டனும் திரும்பி எனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

நான் கதவைத் திறந்து பார்த்தபோது எனது மகளும் மகனும் வாயில் நுரைதள்ளி இறந்துகிடந்தார்கள்.அப்போது எனது மனைவி வீட்டில் இல்லை. எனது மனைவி அபிராமி சுந்தரம் என்பவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவனுடன் சேர்ந்து வாழ என் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திட்டம் போட்டு எனது மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு சுந்தரத்துடன் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது.எனவே, எனது பிள்ளைகளை கொலை செய்த எனது மனைவி மற்றும் சுந்தரம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எஃப்.ஐ.ஆரில் தகவல்கள் உள்ளன.

குழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்த மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.அந்த ரிப்போர்ட் வந்ததும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.பெண்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி மனஅழுத்தத்தில் இருப்பதால் அவர் தவறான முடிவு எதுவும் எடுத்துவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.