குழந்தைகளை பார்க்காமல் இறந்த மனைவி..! சம்பளத்தை அப்படியே கொடுத்த கணவன்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில்வெவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.இதன் காரணமாக 17 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் லினி என்ற செவிலியர் ஈடுபட்டிருந்தார்.

தொடர்ந்து இரவு, பகல் என பெரம்பரா நகர மருத்துவமனையில் தங்கி லினி மக்களுக்கு சேவை ஆற்றி வந்ததால், அவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சலின் தொற்று ஏற்பட்டது.இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்த லினிக்கு, சஜேஸ் புதூர்(36) என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

மக்களுக்காக இரவு, பகல் பாராமல் தொடர்ந்து சேவையாற்றி வந்த லினி இறந்ததால், கருணை அடிப்படையில் அவரின் கணவர் சஜேஸ்க்கு கேரள அரசு சார்பில் வேலை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம் பணியில் சேர்ந்த சஜேஸ்க்கு முதல் மாத சம்பளமான 25,200 ரூபாய் இந்த மாதம் கொடுக்கப்பட்டது. அதை அவர் தற்போது கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது என் மாநிலம் இருக்கும் சூழலில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது என்னுடைய கடமை, இதனால் நான் என்னுடைய முதல் மாத சம்பளம் முழுவதையும் வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துவிட்டேன்.என்னையும், எனது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள கேரள அரசும், மக்களும் இருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் என் மனைவி லினி தனது வாழ்க்கையையும். உயிரையும் செவிலியர் பணிக்காக தியாகம் செய்தார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.அவரின் தியாகத்தால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த வேலையை அளித்த கேரள அரசுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் எப்போதும் நான் விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

லினாவுக்கு ஏற்பட்ட நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று வேறுயாருக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருக்கும் வரை அவரின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தனது கணவரையும், குழந்தைகளையும் பார்க்காமலே கடைசியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.