தமிழகத்தில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த கணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்ததால், அவரது மனைவி, சந்தோசமாக வாழ வந்தேன், இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு சுதா, சினேகா என இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணனின் கூட்டாளியாக சில ஆண்டுகளாக முன்பு இருந்து வந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் மிகப் பெரும் ரவுடியாக வலம் வந்த சந்தானம், சில காரணங்களுக்காக திருந்தி வாழத் துவங்கி, பெயிண்டராக வாழ்ந்து வந்தார்.
இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை, அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன.இந்நிலையில் நேற்றிரவு அண்ணாநகர் வழியே இவர் சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள், மிளகாய் பொடியை தூவி சரமாரியாக சந்தானத்தை வெட்டியுள்ளனர். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், பிரபல ரவுடி ராதாவின் கூட்டாளியான சந்தானம், சில ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்தார். மனைவி சுதாவுடன் குடியிருந்தார். அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள சிலருடன் சந்தானத்துக்கு தகராறு இருந்துவந்துள்ளது.இதனால் பழிக்குப் பழிவாங்க சந்தானத்தை அந்தத் தரப்பு கொலை செய்துள்ளது. அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சந்தானத்தின் அம்மா ஷீபாராணி கூறுகையில், என்னுடைய மகனைக் கொலை செய்தவர்கள் பலரையும் வெட்டிவிட்டு சிறைக்குச் சென்றவர்கள்.
என் மகன் சில ஆண்டுகளாக தான் உண்டு, அவன் வேலை உண்டு என திருந்தி வாழ்ந்து வந்தான். அவனை இப்படி அநியாயமாக கொலை செய்துவிட்டார்களே, இவர்கள் எல்லாம் சிலரின் செல்வாக்கில் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் சந்தானத்தின் மனைவி சுதா கூறுகையில், எவ்வளவு பேரை இப்படி கொல்லப்போகிறார்கள்? சந்தோஷமாக வாழவந்தேன். இன்று எனக்கு வாழ்க்கை இல்லை என்று கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.