நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தனக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நாம் தமிழர் கட்சியை நேரடியாக குறிப்பிடாமல், அந்த கட்சி தலைவர் சீமானுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார். மேலும், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்! அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்!. இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!
எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவின் ஓரிடத்தில், அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள் என கூறியுள்ளார். அந்த பதிவின் இறுதியில், சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள், உங்கள் விருப்பம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு இதோ