சர்க்கரை நோயை குணப்படுத்தும் மெட்பார்மின் மாத்திரையில் புற்று நோய் ரசாயனம்! அதிர வைக்கும் ஆராய்ச்சி ரிப்போர்ட்!

இங்கிலாந்தில் சில நிறுவனங்களின் மெட்பார்மின் மாத்திரையை ஆய்வுசெய்ததில், கார்சினோஜென் நைட்ரோசோடிமெத்தலமைன் என்ற புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட மெட்பார்மின் மாத்திரையில், அந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவிலும் மெட்பார்மின் மாத்திரைகளை ஆய்வு செய்ததில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனத்தின் அளவு அதிகமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படும் பொதுமக்கள் ரசாயனத்தின் அளவு சரியாக இருக்கும் மெட்பார்மின் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் பிரச்னை இல்லை. சர்க்கரை நோயாளிகள் வழக்கம்போல் மெட்பார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவே மெட்பார்மின் மாத்திரை கொடுக்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். சர்க்கரை நோயின் முந்தைய நிலையிலும் மெட்பார்மின் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. பெண்களின் பொதுவான பிரச்னையான `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னைக்கும் மெட்ஃபாமின்தான் பரிந்துரைக்கப்படுகிறது.


இந்த மாத்திரையைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதால் பரிந்துரைக்கப்படுகிறது. ரசாயனங்கள் இல்லாமல் எந்த மாத்திரையையும் உருவாக்க முடியாது. இந்தியாவில் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை, அனைத்து மருந்துகளும் சரியான தரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அந்த நடைமுறை நிறைவடைந்த பிறகுதான் மருந்துகள் விற்பனைக்கு வரும். 2015-ம் ஆண்டின்படி, இந்தியாவில் 6.92 கோடி பேர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 9.8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.