உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் , காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை, வழக்கத்துக்கு மாறாக நேற்று பரபரப்போடு காணப்பட்டது. நேற்று மாலை முதல் அங்கு நடந்தேறிய நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று மாலை 4 மணியளவில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். மாலை 5.30 மணியளவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அங்கு தொண்டர்கள் அதிகளவில் குவிந்து ‘எழுந்து வா தலைவா’ என தொடர்ந்து முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். சுமார் 6 மணியளவில் வெளியேவந்த திமுக எம்பி கனிமொழி, அக்கட்சியின் மகளிரணி தொண்டர்களிடம் கலைந்துசெல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள அங்கு தொண்டர்கள் குவிந்தவண்ணமே இருந்தனர். மாலை 6.30 மணியளவில் சட்டப்பேரவை தலைவர் தனபால், அவரைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் பிரீத்தி ரெட்டி ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியாகும் அறிக்கைக்காக தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சரியாக இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதில், தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர். அறிக்கையைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் சீராக உள்ளதாக தெரிவித்தார். வதந்திகளை நம்பவேண்டாம் என கூறிய அவர் தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு கூறினார்.
மேலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் மருத்துவமணியில் வேறு பிரிவிற்கு மாற்ற படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் மருத்துமனைக்குள் போலீசார் பாதுகாப்புடன் கலைஞர் அவர்களை அழைத்து செல்கின்றனர்.அந்த வீடியோ பதிவு இதோ
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி அறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.
அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இருந்தனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமாக இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.