விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயையும், மகனையும் சிகிச்சை அளித்து காப்பாற்றுவதாக கூறி அழைத்து சென்று அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் மீரா (51), இவர் தனது மகன் தினேஷ்குமாருக்கு (31) பெண் பார்ப்பதற்காக கடந்த 12ஆம் தேதி மகனுடன் இரு சக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, தஞ்சை மாவட்டம் சுக்காம்பார் அருகே சென்ற போது இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு திருகாட்டு பள்ளி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்கான தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், திருச்சி தில்லைநகரில் 7வது குறுக்குதெருவிலுள்ள தனியார் மருத்துவமனையை (ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை) சேர்ந்த சசிக்குமார் என்பவர் மீரா, தினேஷ்குமாரின் உறவினர்களை சந்தித்து தங்களது மருத்துவமனையில் குறிப்பிட்ட 10 நபர்களுக்கு இலவச சிகிச்சை செய்ய இருப்பதாகவும், இருவருக்கும் உரிய சிகிச்சை அளித்து 99 சதவீதம் காப்பாற்றி விடுவோம் எனவும் நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், ஆம்புலன்ஸ்க்கு செலவாகும் ரூ.12,000 பணத்தை கூட தர வேண்டாம், மருந்துகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என கூறி அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி மீரா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் பிறருக்கு பயன்படும் என மருத்துவமனை தரப்பில் கூறியதால் மீராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய செய்துள்ளனர்.
பின்னர் மீராவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்களை அவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது, தினேஷ் குமார் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றபோது, தினேஷ்குமார் உடலுறுப்பை தானமாக கொடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து தில்லை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தினேஷ்குமாரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ள உறவினர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் அரசு மருத்துவமனையில் உள்ள உடலை வாங்கி செல்லவில்லை என்றால் அனாதை பிணம் என புதைத்து விடுவோம் என கூறி மிரட்டல் விடுப்பதாகவும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.