சுர்ஜித்தை மீட்க கடைசி கட்டமாக நடந்த முயற்சியாக தோண்டப்பட்ட சுரங்க குழிக்குள் சென்ற தீயணைப்பு வீரர் அஜித்குமார் அது தொடர்பிலான முக்கிய தகவலை வெளியிட்டார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தை மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. ரிக் மிஷின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டப்பட்டது. ரிக் மிஷின் மூலம் 65 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் குழி எப்படி இருக்கிறது என்று பார்க்க தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்தனர்.

அதாவது உள்ளே சென்று சிறுவனை மீட்க முடியுமா மற்றும் உள்ளே பாறைகள் எப்படி இருக்கிறது என காண முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9.55க்கு தீயணைப்பு வீரர் அஜித்குமார் குழிக்குள் இறங்கினார். உடலில் கயிறு கட்டி படிகள் மூலம் குழிக்குள் இறங்கிய அஜித்குமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சேர்ந்தார். உள்ளே இருந்து பாறை மாதிரியை அவர் வெளியே கொண்டு வந்தார். உள்ளே பாறைகள் கடுமையாக இருக்கிறது என்று பாறை மாதிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தான் மேலும் குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.

இங்கு கிடைமட்டமாக சுரங்கம் அமைப்பது கடினம் அமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 மணி நேரம் ஆகும் என்றும் அவர் கூறியதையடுத்து குழந்தை உடல் எப்படி இருக்கிறது என்று குழாய் வழியே பார்க்கப்பட்டது. ஏர் லாக்கில் 88 அடியில் சுஜித் உடல் இருந்தது. அந்த உடல் சிதிலம் அடைந்து, ரத்த காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சுஜித் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொன்னது மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை இரண்டையும் வைத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, சுஜித் பலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
