தூக்கில் சடலமாக தொங்கிய சசிகலா: சென்னைக்கு வந்த 12 நாளில் சோகம்

சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவரக பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா (17) என்ற சிறுமி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், சசிகலா தூக்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

சசிகலாவின் உறவினர்கள் கூறுகையில், 12 நாட்களுக்கு முன்தான் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர், நன்றாகத் தான் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பொலிசிடம் கூறியுள்ளோம். சசிகலா தூக்கில் தொங்கிய இடத்தில் அவரின் கால், நாற்காலியின் மீது உள்ளது. இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர். பொலிசார் கூறுகையில், சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது எங்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

சென்னைக்கு அவர் வேலைக்கு வருவதற்கு முன் ஊரில் சில பிரச்சனை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசியுள்ளார் என்றனர். இந்தச் சூழலில் மருத்துவர் தரப்பில் பேசியவர்கள், வேலைக்குச் சேர்ந்த பிறகு வீட்டில் எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேசிக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று பள்ளியில் பயிலும் பேத்தியை அழைத்து வர மருத்துவரின் அப்பா தனசேகர் வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார் என கூறியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சசிகலாவின் மரணம் குறித்த காரணம் தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.