தமிழகத்தின் திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ஒருவர் இன்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரின் பாரதி புதூரை சேர்ந்தவர் ரமேஷ், கிளி ஜோசியரான இவர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயிலில் அமர்ந்து ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதேபோன்று இன்றும் ஜோசியம் பார்த்து வந்துள்ளார், அப்போது அங்கே வந்த நபர் ஒருவர் ரமேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற ரமேஷ், அருகிலிருக்கும் உணவகத்துக்கு சென்றுள்ளார், இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு சரமாரியாக ரமேஷை வெட்டியுள்ளார். பொதுமக்கள் பார்க்க பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது, மர்மநபர் ஹெல்மேட் அணிந்திருந்த காரணத்தினால் யார் என்பதை பொதுமக்களால் அடையாளம் காணமுடியவில்லை.
தொடர்ந்து தான் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரத்தை வீசியுள்ளார், அதில் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை ரமேஷ் பிரித்து விட்டதாகவும், ஜோசியர் என கூறிக்கொண்டு
பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும், இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.