தமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை மாணவியின் வீட்டிற்கு ஆறுதல் சொல்லச் சென்ற திருநங்கை கிரேஸ் பானு கூறியுள்ளார்.தர்மபுரி சிட்லிங் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, மலர் தம்பதியரின் மகள் செளமியா(17). இவரது வீட்டில் கழிப்பறை இல்லை. இந்நிலையில் மாணவி செளமியா கடந்த நவம்பர் 5-ஆம் திகதி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினர் சதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தும், காவல்துறையினர் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு பெண்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு ஆறுதல் கூறச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதில் சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி உட்பட நான்கு பேரை மட்டும் பொலிசார் இன்னமும் விடுவிக்காமல் மற்றவர்களைக் காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.இதையடுத்து இவர்களுடன் சென்ற திருநங்கை கிரேஸ் பானு மாணவிக்கு என்ன நடந்தது என்பதை பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாங்கள் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தான் உடலை நல்லடக்கம் செய்துவிட்டதாக கேள்விபட்டோம். இருப்பினும் மாணவியின் அம்மாவை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வரலாம் என்று சென்றோம்.எங்களைப் பார்த்ததவுடன் அவங்க அம்மா கட்டிப்பிடிச்சு கதறி அழதார் பாப்பா தீபாவளி லீவுக்காக வந்துச்சு, எப்பவும் பாத்ரூம் போக ஓடைக்குப் பாதுகாப்புக்கு ஆட்களைக் கூட்டிட்டுத்தான் போவாள்.
அன்றைய தினம் நான் ஆடு மேய்க்கப் போயிட்டேன். என் வீட்டுக்காரர் காட்டு வேலைக்குப் போயிட்டாரு. பாப்பா பாத்ரூம் போக தனியா ஓடைக்குப் போயிருக்கு. அந்தச் சமயத்துல என் புள்ளையை நாசம் பண்ணிட்டானுங்கம்மானு மீண்டும் கதறி அழுதார்.இதைக் கண்ட நாங்கள் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது தவித்தோம்.
அந்த பொண்ணு தனியா ஓடைக்கு வர்றதைப் பார்த்துட்டு ரமேஷ், சதீஷ் இரண்டு பேரும் அந்தப் பொண்ணு கழுத்துல போட்டுறந்த சால்வையை எடுத்து வாய்க்குள்ள திணிச்சு, அவ கை ரெண்டையும் சாரத்தை வைச்சுக் கட்டி, பாலியல் வன்புணர்வு பண்ணியிருந்திருக்காங்க.அப்ப, அந்த வழியா வந்த ஒருவர் அந்தப் பசங்களைப் பார்த்ததும் இரண்டு பேரும் தப்பிச்சு ஓடிட்டானுங்க, மூச்சுத் திணறி கிடந்தப் பொண்ணை மீட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டு, அந்தப் பசங்களைப் பிடிக்க அவர் ஓடியிருந்துருக்காரு
அந்தப் பொண்ணு வீட்டுக்கு வந்து அவங்க அத்தைங்ககிட்ட சொல்லி அழுதுருக்கு. அந்தப் பொண்ணோட அம்மா வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது பொலிசார் அவர்களை அங்கும் இங்குமாக அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையில் பொலிசார் அந்த பெண்ணின் அம்மாவிடம் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறி, பணம் வாங்கியுள்ளனர்.
இப்படி நாங்கள் அந்த பெண்ணின் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று வந்த 40 பேர் அமைச்சர் அன்பழகன் வருகிறார். நீங்கள் எல்லாம் இந்த வீட்டை விட்டு போங்க என்று கூறினார்கள்.உடனே நாங்கள் அவரும் மனுஷன், நாங்களும் மனுஷங்க நாங்க ஏன் போகணும்னு கேட்டோம்.
பேசிட்டே இருக்கும்போது எங்க போனைத் தட்டி விட்டு, வளர்மதி தோழரைத் தள்ளி விட்டாங்க. அதுக்கப்புறம் எங்களுக்குள்ள வாக்குவாதம் நடந்துச்சு. அதன் பின் நாங்களும் அந்த மாணவியை பலாத்காரம் செஞ்ச இடத்துக்குப் பார்வையிடப் போனோம்.அங்கே அந்தப் பொண்ணோட உள்ளாடை, வளையல் எல்லாமே அப்படியே கிடந்துச்சு. வழக்கு பதிவு பண்ணியிருந்தா இதெல்லாமே ஆதாரம்தானே அதை கண்டுக்காம இருக்கிறதுக்கு என்ன காரணம் அந்த இடத்தைப் பார்த்துட்டு திரும்பி வந்தோம்.
நாங்கள் திரும்பி வந்தப்போது அந்தப் பொண்ணோட வீட்டுக்கு அமைச்சர் வந்துட்டுப் போயிட்டார். ஆனால் அந்த பெண்ணின் வீட்டில் நிறைய பொலிசார் இருந்தனர். உடனடியாக எங்கள் அருகில் வந்த பொலிசார், வேனில் ஏத்தி சென்றனர்.
உண்மையை வெளிச்சம் போட்டு உலகுக்குச் சொல்லிடுவாங்களோங்குற பயத்துலதான் இப்படிக் கைது நடவடிக்கை எடுக்குறாங்க, இறுதியில் எங்களை எல்லாம் விட்டுவிட்டு எங்க கூட வந்த தோழர்கள் வளர்மதி, மகாலட்சுமி, வேதியப்பன், ராமகிருஷ்ணன் போன்றவர்களைக் கைது பண்ணியிருக்காங்க. பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தாங்கன்னு வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க என்று கூறியுள்ளார்.