பார்வையற்ற மாணவர்களை அலட்சியப்படுத்திய நடிகர் விஜய்! கண் தெரியாத நீ என்ன பண்ணுவ? வேதனையளித்த பதிவு

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் விதியை மீறி நடத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக அங்கு படிக்கும் மாணவர்கள் பட்ட கஷ்டத்தையும் வேதனையுடன் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியர் சரவண மணிகண்டன் என்பவர் தான் அறிக்கை வாயிலாக நடிகர் விஜய் இப்படி செய்யலாமா? என்று நியாயம் கேட்டுள்ளார். அதில், உங்களின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து. ஆனால் அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கி விடுகிறீர்கள்.ஒரு சிறு தொகையை எங்கோ செலுத்திவிட்டு, இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக் குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டது போல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்து கொண்டதெல்லாம் அநியாயம். முதலில் எங்கள் மாணவர்களால் தடையின்றி பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்கு பார்த்தாலும் கார்கள், வாகனங்கள்.

பள்ளி வளாகம் என்கிற புரிதல்கூட இல்லாமல், ஆங்காங்கே புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என உங்கள் படக்குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். பெரும்பாலான நபர்களுக்கு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை எப்படி கையாள்வது, அவர்களை கண்ணிய குறைவின்றி எப்படி நடத்துவது என்கிற அடிப்படை புரிதலே இல்லை. ஏன் அது உங்களுக்கும் இல்லை என்றே கருதுகிறேன். உங்கள் குழுவினரை அணுகி உங்களை சந்திக்க வேண்டும் என எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற எனக் கேவலமாக பதில் வந்திருக்கிறது.

உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட உதயகுமார், கண்டிப்பாக மாலை ஆறு மணிக்கு சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார். மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் உங்கள் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் லோகேஷ் கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், நிச்சயம் சந்திக்கிறீர்கள் என்று சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது.

ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்க வேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை. எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் நமது ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறுபோட மட்டும் என்கிற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? ஒரு தனியார் பள்ளியாக இருந்திருந்தால், ஹைஃபை மேடையில் நின்று, மைக் பிடித்து அந்த மாணவர்களிடம் பேசியிருப்பீர்கள்தானே? இல்லாவிட்டால் அந்தப் பள்ளி முதலாளிகள் உங்களை விட்டுவிடுவார்களா என்ன?

அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? ஒரு இரண்டு நிமிடங்கள் பேசுவதில் உங்களுக்கு எத்தனை கோடி இழப்பு வந்துவிடும்? ஒரு பார்வையுள்ள ரசிகனைப் போல ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல் வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி திரு. விஜய் அவர்களே என கடுமையான விமர்சனங்களுடன் இந்த கடிதத்தை சரவண மணிகண்டன் என்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

தற்போது வரை இந்த கடிதத்திற்கான எந்த பதிலும் படக் குழுவினரிடமிருந்து வரவில்லை. விரைவில் நடிகர் விஜய் இந்த கடிதத்திற்கு பதிலளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.