பெருக்கெடுத்து பாயும் வெள்ளம்..! பாலத்தை கடக்கும் வாகனங்களின் பதற வைக்கும் காட்சிகள்

இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத பெரும் மழையால் வெள்ளக்காடாக காட்சி தருகிறது.கேரளாவில் இருக்கும் மொத்தம் 14 மாவட்டங்களிலும் சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 அணைகள் திறந்துவிடப்பட்டிருக்கிறது.இடுக்கி சிறுதொணி அணை திறக்கப்பட்டதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியது.

இந்த நிலையில் கேரள வெள்ள அபாயத்தின் உக்கிரத்தை காட்டும் ஒரு வீடீயோ காட்சி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இடுக்கி  மாவட்டத்தின் மூன்னார் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலத்தில் வாகனங்கள் கடந்து செல்வது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த பாலம் உடைந்து போகலாம் என்ற நிலையில், கார் மற்றும் ஆட்டோ சாரதிகள் உயிரை பணயம் வைத்துக் கொண்டு பாலத்தை கடக்கின்றனர்.

பார்ப்பவர்களின் இதயத்தை ஒரு நொடி ஸ்தம்பிக்க வைப்பதாக உள்ளது இந்த காட்சிகள்.இது ஆபத்தானது என்றபோதும் வேறு பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இந்த பாலத்தை கடப்பதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.