பெற்ற மகனையே கழுத்தை அறுத்து கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தாய்..!! விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!

திருச்சி அருகே மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் வசிப்பவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்த முருகன். புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர்.

முருகன் நேற்று இரவு வேலைக்கு சென்றார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்தார். அங்கு, சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான். கோமதி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்துநந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். தகவலறிந்து திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், 2 பேர் சாவில் வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.