மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளைஞர் செய்த விபரீத செயல்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அடுத்த ராசிப்பட்டியை சேர்ந்த மலையாண்டி என்பவரது இரட்டை மகன்களில் ஒருவர் ராமன். பிசியோதெரபிஸ்ட் மாணவனான இவர் தனது குடும்பத்தின் கஷ்டத்திற்கு செய்வினை கோளாறு தான் காரணம் என்று நம்பியுள்ளார்.போதிய மழையின்றி விவசாயம் பொய்த்து போனதே அதற்கு காரணம் என்பதை உணரும் அளவிற்கு சிந்தனை திறன் அற்ற ராமன், தனது குடும்பத்திற்கு செய்வினை வைத்ததாக ஊருக்குள் வசிக்கின்ற 2 குடும்பத்தினர் மீது குற்றஞ்சாட்டி வந்துள்ளார்.

இதனால் அவருக்கு கல்வியில் நாட்டம் குறைந்து மாந்த்ரீகத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செட்டிப்பட்டி என்ற ஊருக்கு சென்று அந்த குடும்பத்தினரை பழிவாங்க பதிலுக்கு செய்வினை வைத்துள்ளார் ராமன். அப்போதும் இவர் தான் நோயால் அவதி பட்டுள்ளார். எதிர் தரப்பினர் சந்தோசமாக இருந்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த இவர் அந்த மந்திர வாதியின் யோசனைப்படி தனது உயிரை மாய்த்து ஆவியாக சென்று அந்த குடும்பத்தினரை பழிவாங்க முடிவெடுத்துள்ளார்.

எப்போதும் மாந்த்ரீகம் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்கும் ராமன் தனது ஸ்மார்ட் போனுடன் 4 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வேலமலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆண்டிச்சாமி கோவிலின் மணி மாட்டப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு கொள்வது போல ஃசெல்பி எடுத்து அதனை பிரேக்கிங் நியூஸ் என்று பவர் டைரக்டர் என்ற ஆப் மூலம் செய்தி போல தயார் செய்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.

மேலும் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் ராசிபட்டி ஊருக்குள் உள்ள இரு குடும்பத்தினர் தான் தனது இந்த முடிவுக்கு காரணம் என்றும், ஒரு ஜோதிட மனிதனின் தூண்டுதலால் இந்த முடிவை மேற்கொண்டதாக கூறி உள்ளான். மேலும் தான் இறந்து ஆவியாக சென்று அவர்களை பழிவாங்க போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளான். தனது குடும்பத்தை உயிர் நண்பன் பார்த்து கொள்வான் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

முழுக்க முழுக்க மாந்த்ரீகத்துக்கு அடிமையாகி, கற்ற கல்வியை மறந்து முட்டாள் தனமாக இந்த முடிவை ராமன் மேற்கொண்டுள்ளதாகவும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற மூட நம்பிக்கைகளை சொல்லிக்கொடுத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மலையில் இருந்து ராமனின் சடலத்தை எடுத்து வந்த உறவினர்கள், காவல்துறையினர் கண்டித்ததால் மீண்டும் மலையிலேயே கொண்டு வைத்து விட்டு வந்த வினோத சம்பவமும் அங்கு அரங்கேறி உள்ளது. பேய் பூதம் ஆவிகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்று நம்பாதவரை அதனை வைத்து மந்திரவாதிகள் பணம் சம்பாதித்து கொண்டிருப்பார்கள் என்பதே உண்மை.