மும்பையை சேர்ந்தவர் மிதுன் பத்தாடியா. இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரங்களில் மிதுன் துபாய்க்கு வேலைக்காக சென்றுவிட்டார். இதையடுத்து 2007-ல் மிதுன் மனைவி மற்றும் அவர் தாய் சந்தா துபாய்க்கு சென்றனர். அங்கு சென்றவுடன் தனக்கு ரூ 15 லட்சம் பணம் மற்றும் கார் வரதட்சணையாக வேண்டும் என மிதுன், மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் கர்ப்பமான மிதுன் மனைவி இந்தியாவுக்கு 2007 ஜூனில் வந்த நிலையில் நவம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதன்பின்னர் மிதுன் தனது மனைவியை தொடர்பு கொள்ளவேயில்லை, கணவர் அவர் தொடர்பு கொண்ட போது உன்னை என்னால் ஏற்று கொள்ள முடியாது, உனக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என மிதுன் கூறியுள்ளார். இது குறித்து மிதுன் மனைவி பொலிசில் புகார் அளித்தும் மிதுன் துபாயில் இருந்ததால் பொலிசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. ஏனெனில் தொடர்ந்து மிதுன் தப்பித்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 14ஆம் திகதி தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மிதுன் இந்தியா வந்த போது பொலிசார் அவரை கைது செய்தனர்.
அப்போது தனது மனைவியை யார் என்றே தெரியாது என கூறிய அவர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தான் தந்தை கிடையாது என ஆணித்தரமாக கூறினார். இதையடுத்து மிதுனுக்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் 99.99% அது மிதுனுக்கு பிறந்த குழந்தை என உறுதியானது.
இதை தொடர்ந்து பொலிசார் மிதுன் மற்றும் அவருடன் வந்த அவரின் தாய் சந்தாவை கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் மிதுனுக்கும் அவர் தாய்க்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.