இந்தியாவில் வேலை செய்யும் பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஓய்வெடுப்பார்கள் என்பதற்காக அவர்களின் கர்பப்பைகள் அகற்றப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு கரும்பு விவசாயம் தான் பிரதானம் என்பதால், அங்கு இருக்கும் பெரும்பாலான மக்கள் கரும்பு தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். இந்நிலையில் கரும்பு தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது.
அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். அதைக் காரணமாக வைத்து கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் எனக் கரும்புத் தோட்ட கான்ட்ராக்டர்கள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அங்கிருக்கும் மண்டா உகலே என்ற பெண்மணி கூறுகையில், எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது மிகவும் அரிது, அனைத்துப் பெண்களுமே நீக்கப்பட்டவர்கள்தான் என்று கூறியுள்ளார்.
மேலும் வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பல்வேறு உடலியல் மாற்றங்கள் நடைபெற கர்ப்பப்பை மிகவும் அவசியம் என்பது மருத்துவ உண்மை. கர்ப்பப்பையை நீக்குவதால் ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.