யூடியூப் விடியோவால் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்.நீங்களும் இந்த தவறை செய்து விடாதீர்கள்

திருப்பூரில் கிருத்திகா என்பவர் சுகப்பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பகாலத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34).பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (28).தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார்.

சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார்.இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.உடனே பிரவீன் தனது மனைவியுடன், கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார்.

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார்.

உடனே கிருத்திகாவையும், குழந்தையையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை கூறியதாவது, என் பொன்னு கர்ப்பமானதுல இருந்தே மகள், மருமகன் இரண்டு பேர் கிட்டயும் மருத்துவமனைக்கு போக சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்கல.வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறதா சொன்னாங்க, மருமகனோட நண்பரும் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார், கடைசியில் இப்படி ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

மகப்பேறு மருத்துவர் பூங்கோதை செல்வராஜ் கூறியதாவது, வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குத் தகுதியான நபர்கள் இருக்க வேண்டும். பிரசவ நேரத்தில் ரத்தப்போக்கு என்பது முக்கியப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை ரத்தப்போக்கு இருக்கும், அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய மருத்துவர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும்.கிருத்திகா நிச்சயம் ரத்தப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.