முதல் படத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர்களின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எப்போதும் அதிகமாக இருக்கும். அந்த அந்தஸ்தை பெற்றவர் இயக்குநர் நவீன். இவர் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான மூடர் கூடம் படம் வசூல் ரீதியாக சாதனை படைக்காவிடினும் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. பிளாக் காமெடியாக உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் வகையில் அமைந்துள்ளன. நவீனே இந்தப் படத்தில் பிரதான வேடத்தை ஏற்றிருந்தார். ஓவியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடித்திருந்த சிந்து என்ற நடிகையை நவீன் திருமணம் செய்து கொண்டார்.
‘மூடர் கூடம்’ படம் வெளிவரும் முன்னரே கடந்த 2013ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சிந்துவை பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முந்தைய பதிவில்,’நவீன் என்பது என் அம்மா சிவசங்கரி நாவல் படிச்சிட்டு வெச்ச பேரு. என் ஊருல போயி நீங்க ஷேக்தாவுத் எனும் என் சான்றிதழ் பெயரை சொல்லி விசாரித்தால் எவர்க்கும் தெரியாது. நான் இஸ்லாமிய குடும்பதிலிருந்து வந்தவன் என்பதை நானே பல நேர்காணல்களில் கூறியுள்ளேன்.
இதெல்லாம் கண்டுபிடிப்பில் சேராது’ என்று குறிப்பிட்டுள்ளார். நவீனின் இந்த பதிவு பலரையும் குழப்பத்தில் தள்ளியது. ஆனால் உண்மையில் தன்னை மதச்சார்பற்றவனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே நவீன் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார் என்று அவருக்கு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம் pic.twitter.com/F0rpz5Q2n9
— Naveen.M (@NaveenFilmmaker) April 16, 2019