வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 110 சவரன் நகைகள் மாயம்: மருமகளுடன் சிக்கிய மாமனார்

கன்னியாகுமரியை சேர்ந்த துணி வியாபாரியான ராஜையனுக்கு, மனைவி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் மூத்த மருமகள் பிரீத்தா கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பிரீத்தாவிடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் இருவர் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரீத்தாவும், அவருடைய மாமனார் ராஜையனும், வீட்டிலிருந்த 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரிடமும் பொலிஸார் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் 110 சவரன் நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுத்த புகாரில் 110 சவரன் எனகூறியிருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார், பிரீத்தா மற்றும் ராஜையனிடம் மட்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதுதான் வீட்டிலிருந்தது 60 சவரன் நகை மட்டுமே என்பது தெரியவந்தது. அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன், 10 சவரன் நகைகளை மட்டுமே மூத்த மருமகள் பிரீத்தா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார். ஆள் இல்லாத சமயத்தில் அதனை எடுத்து சிறிது சிறிதாக செலவு செய்த பிரீத்தா, நகைகள் காணாமல் போனதாக அனைவரையும் நம்பவைக்கவே அப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்ட பொலிஸார், எச்சரித்துவிட்டு சென்றனர்.