மீடூ என்ற ஹேஷ்டேக் உலகளவில் கடந்த ஆண்டு பிரபலமடைந்தது.பிரபல துறைகளில் இருக்கும் ஆண்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் இந்த மீடூ ஹேஸ்டேக் மூலம் உலகத்துக்கு கொண்டுவந்தனர்.ஹாலிவுட் திரையுலகில் தொடங்கிய இந்த ஹேஸ்டேக் அங்கு வேகமாக பிரபலமானது. தற்போது இது இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. சினிமாதுறை, பத்திரிகை துறை உட்பட பல்வேறு துறைகளில் இருந்தும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை முன்வைத்துள்ளனர்.இதில், மத்திய அமைச்சர் அக்பர் , நானா படேகர் தொடங்கி தமிழகத்தில் வைரமுத்து வரை முக்கிய பிரபலங்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றும் சட்டரீதியாக சந்திக்க தயார் என வைரமுத்து கூறியுள்ளபோதும், தொடர்ந்து சின்மயியியை தொடர்ந்து மேலும் இரண்டு பாடகிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுவரை 3 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தியுள்ளனர்.14 வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, வைரமுத்து என்னை ஹொட்டல் அறைக்கு அழைத்தார் என்று பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சின்மயி கூறினார்.
சிந்துஜா ராஜாராம்
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சிந்துஜா அளித்துள்ள புகாரில்,5 வருடங்களுக்கு முன் இசையில் சாதிக்கும் லட்சியத்தில் இருந்தேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னையில் வைரமுத்து நடத்தி வரும் பெண்கள் ஹாஸ்டலில் தங்கினால் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என சொல்லி எனது அம்மா அங்கு என்னை சேர்க்க முயற்சி செய்தார்.அப்போது வைரமுத்துவிடம் எனது அம்மா பேசினார். என்னை நேரில் சந்திக்க வைரமுத்து விரும்பினார். அவரை சந்தித்தபோது 20 நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் போன் செய்து ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்றார். சார் நீங்க என் அப்பா மாதிரி. இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்கு பிடிக்கல என்றேன். மீண்டும் போன் செய்தபோது எனது ஆண் உறவினரை பேச வைத்து நான் ரெக்கார்டிங்கில் இருப்பதாக சொல்ல சொல்லிவிட்டேன். அடுத்த முறை போனில் பேசியவர், தான் சொன்ன விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் இன்னொருவரிடம் எனது போனை தர வேண்டாம் என்றார். மீண்டும் தன்னை பார்க்க வரும்படியும் அழைப்புவிடுத்தார். நான் ஏதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.
பாடகி அனன்யா
எனக்கு 25 வயது. விளம்பர படத்தில் பாடினேன். அப்போதுதான் வைரமுத்துவை சந்திக்க நேரிட்டது. எனது பெயரை கேட்டு பாராட்டியவர், தனது அலுவலகத்துக்கு பாடல் செஷனுக்கு அழைத்தார். அப்போது பலர் முன்னிலையில் அங்கு நான் பாடினேன். தினமும் அவர் எனக்கு போன் செய்வார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். நான் அவரிடம் வாய்ப்பே கேட்கவில்லை. அவராக இதையெல்லாம் சொன்னார். ஒருமுறை போன் செய்தபோது, மலேசியாவில் தமிழ் சங்கம் விருது விழாவுக்கு செல்கிறேன். நீயும் உடன் வர வேண்டும் என்றார். ‘பாடுவதற்காகவா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவா?’ என கேட்டேன். இரண்டும் கிடையாது.
உனக்கு புரியவில்லையா? நமது துறையில் இதெல்லாம் சகஜம். பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார். மீண்டும் ஒரு வாரம் கழித்து போன் செய்து, மலேசியா செல்ல உனக்கும் டிக்கெட் எடுக்கட்டுமா, வேண்டாமா என கேட்டார். நான் வரவில்லை என்றேன். உனக்கான அனைத்து கதவுகளையும் நான் மூடிவிடுவேன் என்றார்.இதனால், எனது பாடகியாகும் கனவு சிதைந்துவிட்டது என கூறியுள்ளார்.இதுவரை, 3 பெண்கள் குற்றம்சுமத்தியுள்ள நிலையில், இன்னும் குற்றச்சாட்டுகள் தொடருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.