கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாபதியின் மகன் பரந்தாமன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள முத்தையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் சிவானியும், பரந்தாமனும் காதலித்து வந்துள்ளனர். சிவானி குடும்பத்துடன் புனேவில் வசித்து வருகிறார். இவர் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவானியின் குடும்பத்திற்கு காதல் விவரம் தெரிந்ததும் சிவானியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிவானியை அழைத்துக்கொண்டு தமிழகம் வந்து பதிவு திருமணம் செய்துகொண்டார் பரந்தாமன்.
இதற்கிடையில், பெண்ணின் தரப்பினர் தனது மகளைப் பரந்தாமன் கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தனது மகள் 18 வயது பூர்த்தியடையாதவர் என்றும் வழக்கு தொடர்ந்ததில், பெண்ணின் ஆவணங்களிலும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்று தெரியவந்ததையடுத்து பரந்தாமன் கைது செய்யப்பட்டார். 69 நாட்கள் சிறையில் இருந்த பரந்தாமன் கடந்த டிசம்பர் 25-ம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையில் 4-ஆம் தேதி காலை மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் ராஜ்கோட்நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குமாட்டியவாறு பரந்தாமன் இறந்துகிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பரந்தாமன் தன் கைப்பட பல பக்கம் கடிதம் எழுதி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், சிவானியின் தந்தை மற்றும் உறவினர்களால் தான் எவ்வாறு மிரட்டலுக்கு ஆளானார் என்பதை விரிவாக எழுதியுள்ளார். காவல்துறை, சிவானியின் பெற்றோருக்கு உதவியாக இருந்ததையும், தன்னையும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் அடித்து சித்திரவதை செய்ததையும் எழுதியுள்ளார்.
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் பாணியில், காதல் மனைவியை வைத்து போன் செய்து, குறித்த இடத்திற் கு பரந்தாமனை புனே வரவழைத்து கொலை செய்துள்ளார்கள் என பரந்தாமனின் நண்பர்கள் கூறுகின்றனர். சாதி மீறி திருமணம் செய்துகொண்ட மகன் இறந்த நிலையில் அது கொலையா? தற்கொலையா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பரந்தாமன் எழுதிவைத்திருந்த கடிதங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.