தமிழகத்தை உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு சினிமா பாணியில் நடந்த சாந்தகுமார் கொலையால் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட ராஜகோபாலின் சாம்ராஜ்யம் சரிவை சந்தித்தது. உழைப்பு உயர்வைத் தரும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ராஜகோபால். சரவணபவன் என்ற ஹொட்டலை தொடங்கி தன் உழைப்பால் இன்று அதன் கிளைகளை உலகம் முழுக்க பரப்பிய பெருமைக்குரியவர்.
ஆனால், ஜோதிடரின் அறிவுரைப்படி ஒரு பெண் மீது கொண்ட சபலத்தால் அவரது வாழ்க்கை தவறான பாதையில் பயணித்து தற்போது ஆயுள் வரை சிறையில் இருக்கும் நிலைக்கு தடம்புரண்டுள்ளது. நடந்தது என்ன? ஜீவஜோதி என்ற 20 வயது இளம்பெண்ணின் தந்தை சரவணபவன் ஹொட்டலில் மேலாளராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் தான் உரிமையாளர் ராஜகோபாலுக்கும், ஜீவஜோதி குடும்பத்துக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. தந்தையுடன் நட்பாக பழகியதன் பேரில் மகள் ஜீவஜோதிக்கும் தனது ஹொட்டலில் பணி ஏற்பாடு செய்துகொடுத்தார் ராஜகோபால்.
ராஜகோபால் ஜோதின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்தார். மேலும் அவரின் மீது ஒரு ஈர்ப்பு உருவாக்கியுள்ளது. ஜீவஜோதியை திருமணம் செய்தால் வாழ்நாள் முழுக்க தன் செல்வாக்கும், பணபலமும் நிலைத்து மேலும் பெருகும் என்ற ஜோதிடர் ஒரு வழங்கிய அறிவுரையின் பேரில் ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய முடிவு செய்தார் ராஜகோபால். ஆனால், இந்த திருமணத்தில் விருப்பமில்லாத ஜீவஜோதி, கணித ஆசிரியர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு வேளச்சேரியில் வசித்து வந்தார். ஜீவஜோதிக்கு திருமணம் ஆன பின்னரும், அவர் மீது கொண்ட சபலத்தாலும், தனது பணபலத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார் ராஜகோபால்.
இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி சாந்தகுமார் திடீரென காணாமல் போனார். 31.1.2001 கணவர் மாயமானது பற்றி ஜீவஜோதி வேளச்சேரி பொலிசில் புகார் அளித்திருந்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர். ஜீவஜோதி அளித்த புகாரில் ராஜகோபாலும் அவரது ஆட்களும் தான் கணவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். பொலிசார் நடத்திய விசாரணையில் 5 நாட்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் சாந்தகுமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், 3 வருடங்களுக்குப் பிறகே இந்தக் கொலையில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ராஜகோபல் அளித்த உத்தரவின்பேரில் கூலிப்படையினர் சாந்தகுமாரை காரில் கடத்தி சென்றுள்ளனர். காரில் செல்லும்போதே அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதில், உயிருக்கு போராடிய அவரை கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசியெறிந்துள்ளனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி விரைவு நீதிமன்றம், ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 2004 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். 2009 ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்டவர்களின் அபராதத் தொகையை குறைத்ததுடன், ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 வருடங்களாக நடந்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜாமீனில் உள்ள ராஜகோபால் ஜூலை 7-ம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.