உடன் பிறந்த அக்காவை நடுக்காட்டிற்கு அழைத்துச் சென்று தம்பி செய்த கொடூரம்…!! அதிர்ச்சி சம்பவம்

5 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக ஆரம்பித்து 5 பவுன் நகையில் முடிந்திருக்கிறது ஒரு கொலை. இது தொடர்பாக அக்காவை கொன்ற தம்பியை சென்னிமலை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சார்ந்தவர் தனசேகர். 24 வயதான இவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை.

இதே நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி சிந்து 27. ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தனசேகர் சிந்துவுக்கு தம்பி முறையாகிறார்.

இந்நிலையில் ஆறுமுகம் தனசேகரிடம் குடும்ப செலவிற்கு ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் “தோப்புபாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக செல்லியிருக்கிறார். அதனால் நீங்களோ, அக்காவோ நேரில் வரவேண்டும்” என கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகம் “உன் அக்காவையே அழைத்து செல்” என கூறியுள்ளார்.

எனவே காலையில் சிந்து வேலை செய்யும் நிறுவனத்தில் சென்ற தனசேகரன், அவரை பைக்கில் அழைத்துச்சென்றுள்ளார். மாலை சுமார் 3 மணியளவில் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன், “அக்காவிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு போக பஸ்-ம் ஏற்றிவிட்டேன்” என சொன்னார். ஆனால் சிந்து வீடு வந்து சேரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் தனசேகரனிடம் ஆறுமுகம் சிந்து எங்கே என்று விசாரித்தார். ஆனால் தனசேகர் குடிபோதையுடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை உறவினர்கள் சென்னிமலை பொலிசில் ஒப்படைத்தனர். அப்போது பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் தனசேகர் கூறியதாவது:

எனக்கு சரியான வேலை இல்லை. அதனால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்த நேரத்தில் என் மாமா ஆறுமுகம் என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் கேட்டார். ஒருவர் வட்டிக்கு பணம் தருவதாக சொல்லி அக்காவை அழைத்து சென்றேன். பைக்கில் போகும்போது அக்கா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை என் கண்ணை உறுத்தியது. எனவே வனப்பகுதிக்கு அக்காவை அழைத்து சென்றேன். அதற்கு என் அக்கா ஏன் இன்னை கூட்டிட்டு வந்தாய் என கேட்டு தகராறு செய்தாள். அதனால் ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து அக்காவின் மண்டையில் அடித்தேன்.

அப்போதும் அவள் உயிர் போகவில்லை. எனவே அவளது முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். அதன்பின்னர் அவளது 5 பவுன் நகையை கழட்டி வந்து எனது உறவினர் ஒருவரின் பெயரில் தனியார் வங்கியில் அடமானம் வைத்து 60 ஆயிரம் வாங்கினேன். அதில் 5 ஆயிரம் ரூபாயை மாமா கேட்டவாறு கொண்டு போய் கொடுத்தேன். அதன்பின்னர் என்னிடமிருந்த கடன்களை மீதி பணத்தை வைத்து அடைத்தேன். அக்காவை பஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக மாமாவிடம் பொய் சொன்னேன்”. இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தனசேகரன் சிந்துவை அழைத்து சென்ற வனப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு மறைத்து வைத்த சிந்துவின் பிணத்தை தனசேகரன் அடையாளம் காட்டினார். பின்னர் தனசேகரனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நகைக்காக அக்காவை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.