கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்

டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை வித்தியாசமான முறையில் கௌரவித்துள்ளார். குறித்த விமானி தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட சுதா சத்யன் என்ற ஆசிரியை கௌரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டில்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான தலைவராக உயர இவரே காரணம் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் என்ற ஆசிரியை ஆனந்த கண்ணீருடன் தனது மாணவனான விமானி ரோகனை கட்டித் தழுவினார்.

இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது. கப்டன் ரோகனின் தாயார், ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது பாடசாலையில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும். தனது மகன் ரோகன் பாடசாலையில் சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*