உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்..எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! மூழ்கப் போகும் நகரங்கள் எது எது??

கடல் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உயர்ந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பல நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபயம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்று பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த உயர்வு அறிவியல் உலகம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அதைவிட இரண்டு மடங்கு உயரும் என்று இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் கடலில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.

நகரங்கள் மூழ்கும்

இப்படி கடல் நீர் நிலப்பகுதியில் உட்புகும்போது லட்சகணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.

லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். வங்கதேசம் மக்கள் வசிப்பதற்கு தகுதியில்லாத நாடாக மாறும்.

இது ஒருபுறம் என்றால் கடல் மட்டம் உயர்வால், 2050ம் ஆண்டுக்குள் நமது நாட்டில் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் 4 கோடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

பருவ மாற்றம்

பருவநிலை மாறுபாடு குறித்த செயல்திட்டம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்த இந்தியா இந்தியாவில் உள்ளகடற்கரை நீர் மட்டம் 3.5 முதல் 34.6 இன்ஞ் வரை 1900 மற்றும் 2100 ஆண்டுகளில் உயரும் என தெரிவித்தது.

இதன் காரணமாக, கடல்நீர் ஊருக்கு புகுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு, கடலோர பழங்குடிகளான மீனவர்களுக்கு பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடலோர நகரங்கள்

முன்னதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசியபோது பருவ நிலை மாற்றம் காரணமாக, இந்திய கடலோர பகுதிகளில் கடல் மட்டம் வெவ்வேறு விகிதங்களில் மாறி வருகிறது.

இதனால் கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்துள்ளது என கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உப்புத்தன்மை கூடும்

கடல் மட்டம் 1990 ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அடி வரை உயர வாய்ப்புள்ளது எனவும் இதனால் கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரிக்கும்,

நிலங்கள் அழியும் ஆபத்துள்ளதாகவும் இதன் காரணமாக குஜராத்தில் உள்ள கம்பட் மற்றும் கட்ச், மும்பை மற்றும் கொங்கன் கடலோரம் மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட கூடிய இடங்களாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட கடல் மட்ட உயர்வு இரண்டு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.