மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பெண்… அரங்கேறிய துயரம்!!

தமிழகத்தில் மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் அம்மாபழம் (56). இவரது கணவர் தங்கதுரை. இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவர்களுக்கு செல்வ சரண் (34) என்ற மகனும், செல்வ அஜிதா என்ற மகளும் (31) உள்ளனர். செல்வ அஜிதாவிற்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செல்வஅஜிதா கருங்குளத்தான் விளையிலுள்ள தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அம்மாபழம் தன்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மருமகன் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், செல்வாஅஜிதா முருங்கைக்காய் பறிப்பதற்காக வீட்டு மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி 15 அடி உயர மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

படுகாயம் அடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர் சிகிச்சைக்கு அழைத்து சென்று, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.