3 மணி நேர சித்ரவதை… உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ் என்கிற 21 வயது இளைஞர் மார்ச் 12-ம் திகதி, கடை ஒன்றில் ஜூஸ் குடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அனந்துவை அவரது பைக்கில் வைத்தே கடத்தி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் வேகமாக அனந்துவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அனந்துவின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அனந்துவை தேடும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். மார்ச் 13-ம் திகதி கரமானா என்னும் இடம் அருகே அனந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பமானது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூன்று சகோதரர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், சகோதர்கள் 3 பேரும் 14 பேர் கொண்ட ஒரு குழுவில் இருந்துள்ளார். இந்த குழு அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 25 வயதிற்குள்ளான ஆட்களை மட்டுமே கொண்ட இந்த குழு மது, கஞ்சா என எப்போதும் போதை மயக்கத்திலே இருந்ததோடு, அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் குடும்பலோடும் தொடர்பில் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது விஜய ராஜுக்கும், அனந்துவின் நண்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சென்ற அனந்துவை விஜயராஜ் தாக்க முற்பட்டுள்ளான். பதிலுக்கு அனந்துவும் விஜயராஜை தாக்கியுள்ளான்.

அன்றிலிருந்து பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக விஜயராஜ் காத்திருந்துள்ளான். இந்த நிலையில் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்பதற்காக விஜாயராஜ் கரமானா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு போதையில் ஆட்டம் பாட்டம் என இருந்த நண்பர்களிடம் நடந்தவை குறித்து விஜயராஜ் கூறியுள்ளான். உடனே போதையில் கொலை செய்வதற்காக அனைவரும் கிளம்பியுள்ளனர். அப்போது கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த அனந்துவை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர். கத்தும் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வாயை கட்டிவிட்டு, 3 மணி நேரமாக கொடுமைப்படுத்தியுள்ளனர்.

முதலில் ஒரு தேங்காயை கொண்டு தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். உயிருடன் இருக்கும்போதே சதை மற்றும் நரம்பை வெளியில் வெட்டியெடுத்துள்ளனர். இதில் அதிக ரத்தம் வெளியேறுவதை படம்பிடித்து ரசித்துள்ளனர். அந்த தாக்குதலின் போது, கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தையும் கூறிக்கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளனர். இறுதியில் அதிக ரத்தம் வெளியேறி துடிதுடிக்க அனந்து இறந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 14 பேர் ஈடுபட்ட இந்த சம்பவத்தில் தற்போது அவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.