300 குழந்தைகள் கடத்தல்..! பிரபல நடிகையால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 300 குழந்தைகளை கடத்தி விற்ற சர்வதேசக் கும்பலின் தலைவனை மும்பை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜுபாய் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் கடத்தலை தொழிலாகவே செய்து வரும் இவர் அமெரிக்கர்களுக்கு விற்கப்படும் குழந்தைகளுக்கு தலா 45 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை மிக குறைந்த தொகைக்கு பெற்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருந்தொகைக்கு விற்று வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து குழந்தைகளை அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்ல பாஸ்போர்ட் தேவை என்பதால் இதிலும் நூதன முறையில் மோசடிசெய்துள்ளனர்.வாடகைக்குக் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை விற்பனைசெய்ய முன்வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பாஸ்போர்ட்டை இரவல் வாங்குவார்கள்.பாஸ்போர்ட்டில் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தின் முகச் சாயலில் உள்ள குழந்தைகளைத் தெரிவுசெய்வதுதான் பிரதான வேலை. அதன்பின்னர், குழந்தைகளுக்கு மேக்கப் போட்டு அமெரிக்காவுக்குக் கடத்தியுள்ளனர்.

குழந்தைகள் அமெரிக்காவுக்குச் சென்றவுடன், உரியவர்களிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிடுவர். ஆனால், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து இவர்கள் எப்படித் தப்பினார்கள் என்பது தற்போதுவரை வெளியாகவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடிகை ப்ரீத்தியின் நண்பர் ஒருவரின் அழகுநிலையத்தில் இரண்டு பெண்களுக்கு மேக்கப் போட்டுள்ளனர். அவர்களுடன் மூன்று ஆண்கள் வந்துள்ளனர். அப்போது, இவ்வாறு மேக்கப் போடுங்கள் என அழகு நிலையத்தின் ஊழியர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அவர்களது நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியது. பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விற்பனை செய்வார்களோ என்ற சந்தேகத்தின் பேரில், ப்ரீத்திக்கு போன் செய்துள்ளார்.

அதன்பின், அழகுநிலையத்துக்கு விரைந்த ப்ரீத்தி, அந்த நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, `அமெரிக்காவில் உள்ள அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் போறோம்’ எனக் கூறியுள்ளார்.காவல் நிலையத்துக்குப் போகலாம் என்று சொன்னவுடன், அவர்கள் பதற்றமடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அவர்களை ப்ரீத்தி தடுத்துள்ளார். இருப்பினும், இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளனர்.தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்து விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.