ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் மெகா வெற்றி மூலம், தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த பார்வையும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது திரும்பி இருக்கிறது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ டாக்டர்’ ஆகிய படங்களை மெகா ஹிட் படங்களாக தந்த நெல்சன், ‘பீஸ்ட்’ படத்தில், கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். விஜய் ரசிகர்களாலேயே இந்த படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், வசூல் ரீதியாக இந்த படம் வெற்றிப்படமாகவே கருதப்படுகிறது.
‘பீஸ்ட்’ படத்துக்கான விமர்சனம் சரியாக இல்லாத போதும், நெல்சன் மீது அதீத நம்பிக்கை வைத்து, ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் பொறுப்பை நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வழங்கினார். அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்ட நெல்சன், வெற்றியை தேடித் தந்திருக்கிறார். இதையடுத்து, அடுத்த படத்துக்கான நடவடிக்கைகளில் நெல்சன் ஈடுபட்டு வரும் நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தை, நெல்சன் இயக்க உள்ளதாக, கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
‘புஷ்பா’ படத்தில், சிறந்த நடிப்பை தந்த அல்லு அர்ஜூன் சமீபத்தில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளார். ‘புஷ்பா’ படம் தந்த வெற்றியில் உள்ள அல்லு அர்ஜூனும், ‘ஜெயிலர்’ படம் தந்த மகிழ்ச்சியில் உள்ள நெல்சனும் இணையும் படம் என்றால், அது நிச்சயம் ‘பிளாக் பஸ்டர் மூவி’யாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புக்காக, ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே அட்லீ, லிங்குசாமி படங்களில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக இருந்து, அது கை நழுவிப் போனது. இந்த முறை, நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.