கொரோனா வைரசுக்கு வீட்டிலேயே மருந்து இருக்கு?… தீயாய் பரவி வரும் தகவல்

எப்போதெல்லாம் ஒரு நோய் பரவுகிறதோ அப்போதெல்லாம் அதை சரிசெய்வதற்கும், குறிப்பிட்ட நோய் தாக்காமல் இருப்பதற்கும் தீர்வாக மிகவும் எளிய விடயங்கள் முன்வைக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில், தற்போது சீனாவின் அனைத்து பிராந்தியங்களிலும், உலகின் 16க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவிலுள்ள கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு மக்கள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலே போதும் என்ற தகவல் சீனாவின் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

“நாசித்துளை வழியாக முதலில் ஒருவரது உடலில் நுழையும் வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் குரல்வளையில் பதுங்கியிருக்கும். எனவே, நீர்த்த உப்பு நீர் பயன்படுத்தும்போது, தொற்றுநோயை ஏற்படுத்துவதற்கு முன்பே பாக்டீரியா கொல்லப்பட்டு விடும். மருத்துவமனைகள் அல்லது பிற பொது இடங்களுக்கு செல்வதற்கு முன்பு எல்லோரும் நீர்த்த உப்பு நீரில் கொப்பளிக்கவும். வீடு திரும்பியதும் மீண்டும் அதே வழிமுறையை பின்பற்ற பரிந்துரைக்கிறேன்” என்று சீனாவின் பிரபல மருத்துவர் ஒருவர் கூறியதாக குறிப்பிட்டு பரப்பப்பட்டு வரும் அந்த தகவல்

முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வீபோ சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ள சீனாவின் குவாங்சு மருத்துவ பல்கலைக்கழகம், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த கூற்று முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது. “புதிய கொரோனா வைரஸை உப்பு நீர் கொல்லும் என்று தற்போதைய கண்டுபிடிப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து வதந்தியை நம்பவோ பரப்பவோ வேண்டாம்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தகவல் தவறாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. “நீர்த்த உப்பு நீரில் வாயை கொப்பளிப்பது, இந்த நோயிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.