காதலர்களை பிரிக்க போலீசார் செய்த விபரீதம்..!! பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்

தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(35). மீன்பிடி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான டயானா என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதாரத்தில் டயானா குடும்பத்தைவிட விஜயராஜ் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால், டயானாவின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்து பேசிக் கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த தகவலும் டயானாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், இதற்கு மேல் விட்டால் சரிபட்டு வராது என்று கூறி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர். இதை அறிந்த விஜயராஜ் மற்றும் டயானா கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் ஒட்டசேகர மங்கலம் பகுதிக்குச் சென்று ரகசியமாகப் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டதை மறைத்துவிட்டு தங்கள் வீடுகளில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜயராஜ் டயானாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதை அறிந்த டயானாவின் தந்தை சூசையா, டயானாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வீட்டு சிறையில் வைத்துள்ளார். இது குறித்து விஜயராஜ் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் தன் மனைவியை அவரது அப்பா வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுக் கொடுக்கும் படியும் கூறியுள்ளார்.

இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டயானாவின் தந்தை சூசையா குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 3-ஆம் திகதி புகார் அளித்தார். அதில், போலி ஆவணங்கள் மூலம் தன் மகளை விஜயராஜ் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் விஜயராஜ் தன் மகளை மிரட்டி வருவதால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனால் இது குறித்து உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதற்காக பொலிசார் இரு வீட்டாரையும் வரவழைத்துள்ளனர். அப்போது டயானா, நான் விஜராஜுடன் வாழ்க்கை நடத்தியது உண்மை, நான் மேஜர் அவருடன் செல்வேன் என்று பொலிசாரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த டயானாவின் தந்தை, தன் மகளை தன்னுடன் திரும்ப அனுப்பி வைக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் பொலிசார் டயானாவை தனியாக அழைத்துச் சென்று பெற்றோருடன் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே டயானாவை குண்டுகட்டாக காரில் ஏற்றிப் பெற்றோருடன் அனுப்பி வைக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். அந்த நேரத்தில் டயானா சத்தம் போட்டு காரில் ஏற மறுத்து அங்கு அழுது உரண்டு புரண்டுள்ளார். சத்தம்கேட்டு பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டனர். சுதாகரித்துக் கொண்ட பொலிசார் டயானாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் டயானாவை அவரின் காதலன் விஜயராஜுடன் காவலர்கள் அனுப்பி வைத்தனர்.