தனியாகத்தான் வாழ்கிறேன்… வேதனையில் அபிராமியின் கணவர் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காதலனுக்காக பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன் என அவரது கணவர் விஜய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அபிராமி வழக்கில் 90 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து குற்றப்பத்திரிகையை தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று அபிராமி வழக்கில் விசாரணை தொடங்கியது. இதற்காக அபிராமி, அவரது காதலன் சுந்தரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த நிலையில், அபிராமியின் கணவர் விஜய் இந்த வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவலை செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன்.

அவர் சிறைக்குச் சென்ற நாள் முதல் இன்றுவரை அவரை நான் சந்திக்கவில்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் அபிராமியின் பெற்றோருடன் குடியிருந்தேன். தற்போது தனியாகத்தான் வாழ்கிறேன். அபிராமி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. ஆனால், அங்கு நான் செல்லவில்லை. என்னை யாரும் அழைக்கவும் இல்லை என கண்கலங்கியுள்ளார். சிறைக்கு சென்ற சமயத்தில் அபிராமி யாருடனும் சகஜமாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். குழந்தைகளை நினைத்து அடிக்கடி அழுவதாகவும் கூறப்பட்டது.

கடும் மனஅழுத்தத்திலும் இருந்தார். சிறையிலிருந்து என்று வெளியில் செல்வோம் என்ற மனநிலையில்தான் அவர் தற்போது இருந்துவருவதாக கூறப்படுகிறது. அவருக்குத் தேவையான உளவியல் ஆலோசனை வழங்கப்படுவதாகவும் இதனால்தான் அபிராமி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைமைக்குத் திரும்பியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவன ஊழியரான இவரின் மனைவி அபிராமி.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் முதல் திகதி அபிராமி, தன்னுடைய இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தைச் சந்திக்க வெளியூர் சென்றார். குழந்தைகள் இறந்து கிடந்ததைப் பார்த்த விஜய், குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அபிராமியையும் சுந்தரத்தையும் கைது செய்துள்ளனர்.